பின்வரிசை – Pinvarisai

பாதியில் முடிந்த பயணம்…சந்திரபாபு… அமரத்துவம் அடைந்த தினம் இன்று (7)

Posted in சினிமா by pinvarisai on மார்ச் 7, 2016

Image result for சந்திரபாபு
                                       மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்                                   சந்திரபாபு                                            மனைவி ஷீலா
விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டமையால் இவரது பெற்றோர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட அவர்களுடன் சென்ற சந்திரபாபு கொழும்பு நகரில் பள்ளிப் படிப்பை முடித்தார்.
டி.அருள் எழிலன்
கனவுகள் விபரீதமானவை. வாழ்க்கைக்கும் கனவுக்குமான இடைவெளி அதிகப்படும் போது நேருகிற அவலங்கள் துக்ககரமான சில நினைவுகளை விட்டுச் செல்கிறது.அந்த நினைவில் இன்றும் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரு பிம்பம்தான் சந்திரபாபு.

ஐம்பத்தி மூன்று வருடங்களுக்கு முன் தூத்துக்குடியில் இருந்து சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்தான்.
மகிமை தாஸ்.என்கிற இளைஞன்.ஒரு சினிமா கம்பெனியின் முன் நின்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்ததாக போலீசால் குற்றம் சாட்டப் பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவனைப் பார்த்து-
 நீதிபதி கேட்டார்.”வாழ்க்கையில் துன்பம் நேருகிறது என்பதற்காக தற்கொலை செய்யலாமா?எனக்கு, இவர்களுக்கு, அதோ அந்த காவலருக்கு எல்லோருக்கும் தான் கஷ்டம் இருக்கிறது.நீ மட்டும் ஏன் தற்கொலைக்கு முயற்சித்தாய்”
நீதிபதியைப் பார்த்து அவன் ஒரு தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி கையில் சூடு வைத்துக் கொண்டான். நீதிமன்றமே வியந்துபோய் நின்றது. சலன மற்றவனாய் அவன் மிஸ்டர் நீதியைப் பார்த்து சொன்னான்-
”இப்போது எனக்கு நானே சூடு போட்டுக் கொண்டேன்.சூடு போட்டேன் என்பது மட்டும் தான் உங்களுக்குத் தெரியும் அதன் வலி எவ்வளவு வேதனையானது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்”எனச் சொல்லி அனைவரையும் திகைக்க வைத்த அந்த இளைஞன் தான் நடிகர் சந்திரபாபு!
தூத்துக்குடியில் ஒரு சாதாரண மீனவக் குடும்பத்தில் பிறந்த சந்திரபாபுவின் தந்தை ஜோசப்  பிச்சை  ரொட்ரிக்கோ சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.
காமராஜருக்கு மிகவும் நெருக்கமானவர்.இந்திய அரசின் சுதந்திர வீரர்களுக்கான தாமிரப்பட்டயம் பெற்றவர்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பhணியை வகுத்துக் கொண்ட சந்திரபாபு  பாமர தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நாடோ டிக் கலைஞன். ”பிறக்கும் போதும் அழுகின்றாய்” – என்ற புகழ் பெற்ற பாடலின் துவக்க வரிகளை கவியரசு கண்ணதாசனுக்கு எடுத்துக் கொடுத்ததே சந்திரபாபு தான்.
அவருடைய முதல் படமான ‘தன அமராவதி’ (1952) – யில் ஆரம்பித்து இறுதிப் படமான ‘பிள்ளைச் செல்வம்’ வரையில் அந்தக் கலைஞனுடைய தனித்தன்மை தெரியும்.
”ரிகல்சலே பண்ணமாட்டான் கேட்டா ஸ்பாட்டுல வராதுண்ணுவான் ஒவ்வொரு காட்சி முடிஞ்சதும் நல்லா வந்துதாடான்னு கேட்பான் வெறுமனே நல்லாயிருந்ததுன்னு சொன்னா விடமாட்டான் எவ்வளவு கவர்ச்சியா நடனம் இருந்ததுன்னு விளக்கிச் சொல்லணும் அவனோட நடிப்ப பாத்து யூனிட்டே வியக்கும் அப்படி ஒரு நாட்டியக்காரன்” – என்கிறார் மகாதேவி  நாடோ டி மன்னன்  மாடிவீட்டு ஏழை  அக்கினி புத்திரன் என பல படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்தவரும் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பருமான ரவீந்திரன்.
ஆனால் தொடக்கத்திலிருந்தே சந்திரபாபுவுடைய நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருந்தது. சினிமாவை நேசித்த அளவு தன் உடலை பற்றியோஇகுடும்பத்தைப் பற்றியோ சிந்தனைகளற்று இருந்திருக்கிறார் சந்திரபாபு.
“படப்பிடிப்புக்கு ஒழுங்கா வரமாட்டான். சில நாள் பாதியிலே எங்கேயாவது போயிடுவான்.மகாதேவி படத்துல பாதி சீன்ல தான் வருவான்இ ஒரு பாதியில வரமாட்டான் அப்புறம் ராம்சிங்க போட்டு ஒரு மாதிரியா படத்தை முடிச்சோம்”என்கிறார் ரவீந்திரன்.
பி.ஆர். பந்துலு எடுத்த ‘சபாஷ்மீனா’ சந்திரபாபுவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப்படத்தில் ஹீரோ சிவாஜியா சந்திரபாபுவா என கேட்குமளவுக்கு -இரண்டு கதாபாத்திரம் சந்திரபாபுவுக்கு. அந்தப்படத்துக்கு பிறகுதான் தன் சம்பளத்தை உயர்த்திப்பேச ஆரம்பித்தார்.
தன் அடுத்த படத்துக்கு ஒரு -லட்சம் சம்பளம் வாங்கினார்.அப்போதைய சினிமா உலகில் ஒரு -லட்சம் சம்பளம் வாங்கிய ஒரே காமெடி நடிகன் சந்திரபாபு மட்டும்தான். சந்திரபாபு -இல்லை என்றால் பட விற்பனையில் சுணக்கம் ஏற்பட்ட காலம் அது. தனது நடிப்பின் மீது கொண்டிருந்த அந்த நம்பிக்கை ஒரு பக்கம் –இருந்தாலும் தான் நேசித்த சினிமாவிலும் சொந்த வாழ்க்கையிலும் சில சறுக்கல்களை சந்திக்கத் துவங்கிய காலம் அது.
சந்திரபாபுவை பேசுகிறவர்கள் அவர் கட்டிய வீட்டைப்பற்றியும் பேசுவார்கள்.ஆனால் அந்த மனிதனது சினிமாப் பயணம் பாதியிலே முடிந்து போனது மாதிரி அவர் கட்டிய வீடும் பாதியிலேயே முடிந்து போனது ஒரு பரிதாபமான கதை.
”கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய கடன் வாங்கி சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒரு வீடு கட்டினார் படுக்கையறை வரை காரிலே போய் வரும்படி பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த வீடு கட்டப்படும் போதே அவரோட சில எதிர்பாராத தோல்விகளால் நின்று போனது  வட்டியும்  முதலுமாக ஒன்றரை லட்சம் கடனாகிப் போக பணம் கொடுத்தவர்களே அந்த வீட்டை வாங்கிக் கொண்டனர்” என்கிறார் ரவீந்திரன்.
எப்போதும் கலகலப்பாக -இருக்கும் சந்திரபாபு படப்பிடிப்பு நேரத்திலும் ரொம்ப சந்தோசமாக எல்லோரையும் கிண்டல் செய்வாராம். அவருடைய கிண்டலுக்கு யாரும் தப்ப முடியாது ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் பாலையாவும் சந்திரபாபுவும் தண்ணியடிச்சிகிட்டு இருந்தாங்க அப்போ நாகிரெட்டி அங்க வந்துட்டாரு
உடனே கண்ணாடி கிளாஸ்ல குடிச்சிக்கிட்டிருந்த சந்திர பாபு கிளாசை மறைச்சுட்டான். பாலையா எவர்சில்வர் டம்ளர்ல குடிச்சிக்கிட்டிருந்தார். “என்னப்பா காப்பிய -இவ்வளவு சூடா குடுத்திட்டீங்களே”என்று சொன்னபடி கையில இருந்த டம்ளர்ல ஏதோ சூடான காபியை தந்துட்டது போல ஆக்ஷன் பண்ணிக் கொண்டே ஊதி ஊதி குடிச்சி டபாய்ச்சுட்டார்.
சந்திரபாபுவை நெருக்கமாக அறிந்தவரும் எடிட்டருமான லெனினை கேட்டதற்கு ”நம்மோட சுயநலங்களுக்காகத்தான் சந்திரபாபுவை பற்றி பேச வேண்டியிருக்கு. அவன் வாழும் போது திமிர்பிடித்தவன்  அகம்பாவக்காரன் என்றார்கள்.என்னைப் பொறுத்தவரையில் இந்தப் போலிகளுக்கு மத்தியில் வாழ்ந்த அவன் ஒரு சிறந்த மனிதன் அவ்வளவுதான்” என்றார் ஆதங்கத்தோடு.
லெனின் சொல்வது உண்மை தான். சந்திரபாபுவுடைய நடிப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அவரை ஏற்றுக்கொண்டது கிடையாது.”யாருக்கு சொந்தம்”என்கிற படத்தில் ஒரு பாடல் வரும் ”என்னை தெரியலையா  இன்னும் புரியலையா குழந்தை போல என் மனசு. என் வழியோ என்றும் ஒரு தினுசு” -என்று அந்த இரண்டே வரிகள் போதும் சந்திரபாபுவை புரிந்து கொள்வதற்கு.
“என்னை பாபு சாரிடம் அறிமுகப்படுத்துங்கள் என்று வந்தான் அவன் பேரு சீனிவாசன். தேங்காய் சீனிவாசன் அப்படீண்றதெல்லாம் பின்னாடி வந்தது தான். அப்ப பாபு ஆழ்வார்பேட்டையில் இருந்தார்.அங்கே உள்ளே போனதும் நான் சீனிவாசனிடம் சொன்னேன் அவர் ஒரு மாதிரி டைப்  நீ வந்திருக்கேன்னு சொல்லிட்டு உன்னை உள்ளே கூப்பிடுறேன்னு சொல்லிட்டு நான் உள்ளே போய் பாபுவிடம் சொன்னதும் அந்த மடையனை கூப்புடுன்னார்.
சீனிவாசன் உள்ளே வந்ததும் டமால்னு பாபு வோட கால்ல உழுந்துட்டான். ”தெய்வமே உன்ன பாப்பேன்னு நெனைக்கலே என்றுரொம்ப உணர்ச்சி வசப்பட்டார் சீனிவாசன்” – என்று சொல்கிறார் நடிகர் கண்ணன்.
இது நடந்து சில ஆண்டுகள் கழிந்துவிட்டன.இடைப்பட்ட காலத்தில் தனிமை காரணமாய் போதைப் பழக்கம் மிக அதிகமாய் அவரை ஆக்ரமித்திருந்தது.அன்றைக்கு சினிமாவில் அதிகார சாம்ராஜ்ஜியம் நடத்திய ஒரு சிலருக்கு எதிரான ஒருவிதமான கலகமாகவே சந்திரபாபு மதுவை கையாண்டார்.அவர் தன்னை வருத்திக் கொண்டார்.
“தேங்காய் சீனிவாசன் கோபாலபுரத்துல ஒரு வீடு கட்டினார். அதோட கிரகப்பிரவேசத்துக்கு நானும் போயிருந்தேன். ஒரே கூட்டம் கல கலப்பாயிருந்தது. அந்த கதவோரம் தாடியெல்லாம் மழிக்காம அடையாளமே தெரியாம ஒருத்தர் இருந்தார். அவுர பாத்து ‘பாபு சாப்பாடு ரெடிண்ணாங்க’ அப்பத்தான் எல்லோரும் திரும்பிப் பார்த்தாங்க. நான் அதிர்ந்து போனேன்  அது சந்திரபாபு’ என்கிறார் நடிகர் கண்ணன்.
அறுபதுகளில் ராக் பற்றி பேசியர்கள் உண்டு ஆனால் மேற்கத்திய நடனத்தை அச்சுப் பிசகாமல் ஆடிய அந்த கால்கள் தள்ளாட ஆரம் பித்திருந்தது அந்த காலத்தில்தான்.அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு “குங்குமப்பூவே”பாடல்தான்.உண்மையில் அது ஒரு ராக் அண்ட் ரோல் இசை வடிவம்.ஆனால் இந்துஸ்தானி பாரம்பரரீய இசையையும் கலந்து கட்டி அதை தமிழுக்கு சாத்தியமாக்கியிருந்தார்.
இதில் வெற்றியடைவது சந்திரபாபு மாதிரிப்பட்ட அசாதாரணமான கலைஞர்களால் மட்டுமே முடியும்.
“ஜெமினி ஸ்டுடியோவில் ‘இரும்புத்திரை’-ன்னு ஒரு படம் அதுல நான் ரங்கராவ் சிவாஜிஇசந்திரபாபு எல்லோரும் நடித்தோம். எங்களுக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தது கொத்த மங்கலம் சுப்பு. அவர் எனக்கும்  சிவாஜிக்கும் டயலாக் சொல்லிக் கொடுத்துட்டு சந்திர பாபுவிடம் போனாரு…”சந்திரபாபுவுக்கு டயலாக் சொல்லிக் கொடுகுறீங்களா? என சுப்புவை பார்த்து கேட்டுவிட்டார்.
ரங்கராவ் வந்து.”டேய் மாப்ளே பாத்து நடந்துக்கடா”என்றார். அதற்கு பாபு “இருக்கட்டுமே ஐ டோ ண்ட் கேர் சீன் என்னன்னு சொல்லுங்க இந்த பாபுவுக்கு அது போதும்”என்றதை நினைவு கூறுகிறார் நடிகர் கண்ணன்.
இதை ஒரு நடிகனின் ஆணவமாக எடுத்துக் கொள்ள முடியாது ஏனென்றால் சந்திரபாபு பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே தீனி போட்டார்.
“மாடிவீட்டு ஏழை” படத்தை சந்திரபாபு தயாரித்தார் அதில் எம்.ஜி.ஆர் நடிக்க ஏற்பாடாகி இரண்டு லட்ச ரூபா முன்பணமும் கொடுக்கப்பட்டு விட்டது.
அந்தப் படத்துக்கு பைனான்சியர் ஒருத்தர் -இருந்தார். அந்த மனிதருக்கும் சந்திரபாபுவுக்கும் சொந்த தகராறு ஒன்று -இருந்தது. பிரச்சனை எம்.ஜி.ஆரிடம் போன போது சம்பந்தப்பட்ட நபரை விட்டு விலகுமாறு சொன்னார். சந்திரபாபு மறுத்துவிட்டார் தன் பக்க நியாயங்களை எடுத்துச் சொன்ன சந்திரபாபு அந்த விசயத்தில் மிகப்பிடிவாதமாக இருந்தார்.எம்.ஜி.ஆர் உடனே “நான் நடிக்கிறதால தானே -இந்த பிரச்சனையெல்லாம் வருகிறது” எனச் சொல்லி முன்பணமாக கொடுத்த இரண்டு லட்ச ரூபாயையும் சந்திரபாபுவிடம் திருப்பிக் கொடுத்து விட்டார் ”மாடிவீட்டு ஏழை” நின்று போனது என்கிறார் ரவீந்திரன்.
சந்திரபாபுவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் கேட்டபோது.”எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு  மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்
“கவலை இல்லாத மனிதன்” என்று ஒரு படத்தை சந்திரபாபுவை வெச்சி கண்ணதாசன் எடுத்தாரு. அந்த படத்தை ஆரம்பிச்ச பிறகுதான் கவிஞர் கவலையுள்ள மனிதன் ஆனாரு. அந்த படத்துக்கு நான் தான் மியூசிக் போட்டேன். சந்திரபாபு எங்கிட்ட வந்து கே.எல்.சைகால் பாணில எனக்கு ஒரு பாட்டு போடுங்கன்னான். அப்படி போட்ட பாட்டுதான் “பிறக்கும் போதும் அழுகின்றாய்” பின்னாடி பாகிஸ்தான் போரில் பாதிக்கப்பட்ட மக்களை சண்டடீகரில் சந்திக்க போனபோதுஇ கவிஞரும் வந்திருந்தார்.
சந்திரபாபு தென் இந்தியர்களான அந்த மக்களிடம் அந்த பாட்டை பாடினது இன்றும் நெஞ்சில் நிழலாடுது. பிறகு அதே பாட்டை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன்னாலயும் பாடினான். யதார்த்த உலகில் நடிக்காத திறந்த புத்தகம் அவன்” – என்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.
மிக எளிதில் காதல் வயப்படக் கூடிய சந்திரபாபுவுடன் இணைந்து நிரந்தரமாக ஒரு காதல் வாழ்க்கையை வாழ யாருக்கும் கொடுத்து வைக்க வில்லை. -இரண்டு அல்லது மூன்று பெண் பார்ப்புகள்இ பல்வேறு சந்தர்ப்பங்களில் கழிந்து போன பிறகு 1958 மே மாதம் வியாழக்கிழமை புனித தாமஸ் ஆலயம்  மயிலாப்பூரில் வைத்து ஒரு பெண்ணை மண முடித்துக் கொண்டார். அந்த வாழ்க்கையும் சொற்ப நாட்களிலேயே நீர்த்துப் போய்விட்டது.
1974 மார்ச் எட்டாம் தேதி அபிராமபுரம் சித்ரஞ்சன் (பீமண்ணம் தெரு) தெருவிலிருந்த அந்த வீடு. அந்த வீட்டில் தனி மனிதனாய் வாழ்ந்து கொண்டிருந்த பாபுவின் உதவிப்பையனுக்கு அதுவும் ஒரு வழக்கமான காலைதான். சந்திரபாபுவை எழுப்புவதற்காக அந்தப் பையன் அவர் அறைக்குப் போனபோது அந்தக் கலைஞனின் உயிர்பிரிந்திருந்தது. அவனுடைய தீராத தனிமையும் முடிவுக்கு வந்தது.
சந்திரபாபுவின் மரணச்செய்தி கேட்டு திகைத்துப்போன சிவாஜி கணேசன் தான் கலந்து கொண்டிருந்த சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவை பாதியில் முடித்துக் கொண்டு திரும்பி வந்து பாபுவின் உடலை நடிகர் சங்கதிடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தார்.
சாமான்யமான அந்த கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே காமராஜரும் வந்து அஞ்சலி செலுத்தி விட்டுப் போனார்.
மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட அந்த இறுதி ஊர்வலம். ஜெமினி மேம்பாலம் வழியாக சாந்தோம் தேவாலயத்துக்கு வந்தது.
அந்த மரண ஊர்வலத்தில் ஒரு மனிதன் தள்ளாடியபடியே வந்தார். அது பாபுவின் தந்தை ஜோசப்  பிச்சை ரொட்ரிகோ. அவரை சிவாஜி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். அந்த தந்தையின் கண்ணீருக்கு முன்னால் அவன் சலனமற்று கிடந்தான். அந்த கலைஞனின் வாழ்வு -இவ்விதம் முடிவுக்கு வந்தது.
மந்தைவெளி கல்லறைத் தோட்டத்தில் நிம்மதியாக உறங்குகிறான் அந்த கலைஞன். உயிரோடுஇருக்கும்வரை அங்கீகரிக்கப்படாத மனிதர்களை மரணத்துக்கு பிந்தைய கலைஞர்களாக உலகம் ஒப்புக் கொள்கிறது.அதே அங்கீகாரம் இன்று சந்திரபாபுவுக்கு இருகிறது என்றே தோன்றுகிறது.
திரைக்குப் பின்னால் சந்திரபாபுவின் வாழ்க்கை அவலமானது. அங்கீகாரத்துக்கும் அரவணைப்புக்கும் ஏங்கிய சந்திரபாபுவால் எந்த போலி மனிதர்களிடம் சமரசம் செய்து கொள்ள முடியவில்லை.
இறுதிக் காலத்தில் நிரந்தர போதையினால் சந்திரபாபு தன்னை அழித்துக் கொள்ளவில்லை.மாறாக இன்னும் இந்த கவர்ச்சி உலகில் தன் தீராப் போதையால் நம்மை வசீகரித்துக் கொண்டுதான் இருக்கிறான் சந்திரபாபு.
தமிழ் சினிமாவில் அவன் விட்டுச் சென்ற குரல் தனிக்குரலாய் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: